Thursday, February 09, 2006

கனவுக்கன்னி

சமர்ப்பணம் : முகம் பார்த்து, பெயர் பார்த்து, ஏதேதோ பார்த்து காதலிக்கும் காதல்களுக்கு நடுவே, உடம்பைப் பற்றிக் கவலைப்படாத ஒரு வித்தியாசமான கனவுக்கன்னியைக் காதல் செய்பவர்களுக்காகயோகி கேட்டான்.
தாயுடன் தகராறு செய்த நீ
காதலித்ததுண்டா?

போகி சொன்னான்.
கனவு காண்பதுண்டு

போகி இன்னும் சொன்னான்.
கடவுள் என்னும் கற்பனையில்
கல்லாய் வாழ்வதில்லை நான்
காதல் என்னும் கற்பனையில்
சிற்பமாய்ச் செதுக்கிக் கொள்கிறேன்
என்னையே நான்!

யோகி கேட்டான்.
யார் அவள்?
செங்கோல் தேவையான இந்நேரத்தில்
கொடுங்கோல் ஆதரிப்பவள்.

போகி சொன்னான்.
கொடுங்கோலன் என்று நீங்கள் சொன்ன
ஹிட்லரைக்கூட
நீங்கள் சொல்லும் செங்கோலனாக
மாற்றப்போன ஈவா ப்ரான் அவள்!

யோகி கேட்டான்.
ஓ! அப்படியானால்
ரகசியக் காதலோ?

போகி சொன்னான்.
ரகசியமாய் செய்ய
மனிதர் செய்யும்
தாம்பத்தியக் காதலில்லை இது!

யோகி கேட்டான்.
முதல் பார்வையிலேயே காதலோ?

போகி சொன்னான்.
இல்லை.
மூன்று 'கேள்வி'யில் காதல்!

போகி மேலும் சொன்னான்.
தாய் சொல்வதுண்டு
நான் பிறந்தபோது
பக்கத்துக் கட்டிலில்
அவளும் பிறந்தாளாம்.

ஒருநாள்
நாயுடன் வலம்வந்த அவள்
தவறாக நுழைந்தாளாம்
எங்கள் வீட்டில்!
வீட்டில் கும்பலைப் பார்த்து
பயந்து 'போய்'விட்டாளாம்!

அப்புச்சி இறந்த மறுநாளில்
குளத்தில் நான் குளிக்க
முகங்கள் தெரியாத இடைவெளியில்
அக்கரையிலிருந்து
அழைத்தாள் அவள்!
நீச்சல் தெரியாமல்
நான் முழிக்க
முடியை இழுத்து
கண்டித்தார் சித்தப்பா!

இப்படி
மூன்றுமுறை தற்செயலாக
நாங்கள் நெருங்கியும்
நாங்கள் பார்த்துக் கொண்டதேயில்லை!

பாட்டிதான் சொன்னாள்
அவளைப்பற்றி
அரைகுறையாக,
இலைமறை காயாக!

எங்கள் வீட்டிற்கு வேண்டுமென்றே
அவள் வந்திருக்கிறாள்
மூன்றுமுறை!
ஒருமுறை அத்தையின் தலைப்பிரசவத்திற்கு,
ஒருமுறை தாத்தாவைப் பார்க்க,
கடைசியாக விபத்துக்குள்ளான பாட்டியைப் பார்க்க.....

யாரும் அவளை எங்கள் வீட்டில்
முழுமையாகப் பார்த்ததில்லை!
யாரும் அவளை
எங்கள் வீட்டிற்கு அழைப்பதுமில்லை!
இருந்தாலும் வருவாள்
ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டு!
ஏனோ தெரியவில்லை
அவள் முகத்தை என்னிடம் மட்டும்
காட்டியதேயில்லை!

அவள் வந்தால்
ஒரு கூட்டத்தைச் சிரிக்க வைப்பாள்
ஒரு கூட்டத்தை அழவைப்பாள்!
என்னைப் போலவே
முரண்பாடுடையவள்!

அவளை
அங்கே பார்த்ததாகவும்,
இங்கே பார்த்ததாகவும்
பலர் சொல்வதுண்டு!
என்னுடன் பிறந்தபோதே
நான் கேட்டிருந்தால்
என்னிடம் காட்டமாட்டாள்
இப்படி பூச்சாண்டி!

யோகி கேட்டான்.
பார்க்காமலே காதலோ?

போகி சொன்னான்.
நான் அவளைப் பார்த்ததில்லை.
என்னை அவள் பார்ப்பதை
நான் பார்த்ததில்லை
மூன்றுமுறை!

முதல்முறை
வீட்டு மொட்டைமாடியில்
முகத்திற்கெதிரே
பல்பு வெடிக்கையில்
முகம்மூடிக்கொண்டு
கீழிறங்கப் பார்த்தேன்!

மறுமுறை
காவிரியின் ஓர் அணைக்கட்டில்
கால்தவறி வழுக்கி விழுகையில்
தண்ணீருக்குள்
அவள் பாதம் பார்த்தேன்!
எழுந்து பார்த்தால்
நண்பர்கள் சுற்றி
அவளைத் தப்பவிட்டனர்!

கடைசியாக
வங்கக்கடலின் தென்கரையில்
தூக்கி வீசிய ஓரலையில்
எனக்கும், சித்திரம் தாங்கிய ஒன்றிற்கும்
இடையே அவள் இடையைப் பார்த்தேன்!
இடைபற்றிய
கரங்கள் விலக்கி
நடுக்கடல் நீந்திப்போனாள்!

அதன்பின் அவளைப்
பார்க்க முயற்சித்தேன்
மூன்றுமுறை!
மூன்றும் தோல்வி!

முதல்முறை
சென்ற நூற்றாண்டின் கடைசிநாள்.
எனக்கு வயது போதாதென்று
மனக்கதவிடுக்கில்
சொல்லி மறைந்தாள்!

மறுமுறை
இந்நூற்றாண்டின் முதல் கிறிஸ்மஸ்.
சுற்றி என்னைத் தேடாதே
கற்றுச் சுற்றம் பாரென
தெருவில் கூவிச் சென்றாள்!

கடைசியாக
இந்நூற்றாண்டின்
முதல் லீப் ஆண்டின்
கடைசி பவுர்ணமி.
திருத்தலப் பயணம் ரத்துசெய்து
இம்முறை இல்லையேல்
இனியில்லை இவளென முடிவெடுத்தென்.
திரையரங்கின் இருட்டில்
ரகசியம் சொல்கிறேன்
வாவென்றாள் கனவில் வந்து.
படம் முடிந்தது.
அவளின் ஆரம்பமேயில்லை.
வெளியே வந்தால்
ஊரெல்லாம் அவளைப் பற்றிய பேச்சு.
திருத்தலம் திசைமாற்றி
திரையரங்கில் திகைக்கச் செய்து
இருபத்தோராண்டு தேடும்
என்னை ஏமாற்றி
இருபத்தோராம் நூற்றாண்டையே
அவள் நினைப்பில் மூழ்கவைத்தாள்!

யோகி சொன்னான்.
நடத்தை கெட்டவள்

போகி சொன்னாள்.
பெண்ணின் மரியாதை குறைக்க
சமுதாயம் எடுக்கும் ஒரே ஆயுதம்
'அவள் நடத்தை கெட்டவள்'
என்ற பட்டம்.
ஆனால் நான் சொல்வேன்
'அவள் நடத்தை கெடுப்பவள்'
உங்கள் நடத்தைகள்
கெட்டவைகளாய்ப் போனபோது
அதைக் கெடுப்பவள்
எப்படி கெட்டவளாய்ப் போக முடியும்?

முசோலினியை நடுரோட்டில்
தலைகீழாகத் தொங்கவிட்டது
உங்கள் நடத்தைதானே?
அந்தக் கூட்டத்திலும்
'மனிதனை மதிக்காமல்
பிணத்தை மதித்து'
முசோலினியின் காதலியின்
பாவாடை சரிசெய்தாளாம் ஒருத்தி!

நீங்களோ
என்னைக் கொன்றுவிட்டீர்கள்
உங்கள் வார்த்தைகளால்.......
தலைகீழாகத் தொங்கவிட்டீர்கள்
உங்கள் கட்டுப்பாடுகளால்......
நடுரோட்டில் வதைத்தீர்கள்
உங்கள் நம்பிக்கைகளால்...
அதனால்தான் தேடுகிறேன் ஒருத்தியை!
உங்கள் பாஷையில் 'கனவுக்கன்னி'யை!

கண்ணை மூடிக்கொண்டு
கண்டவர்மேல் கனல் ஏவும்
கட்டுப்பாடற்ற
கண்ணகி வேண்டாம் எனக்கு!
என் மானத்தை
அவள் மானத்தால்
பூட்டிவைக்கும்
ஒரு மாதவி வேண்டும் எனக்கு!

முகவெட்டு
இன்னும் பல வெட்டுகளைப் பார்த்து
காதலிக்கும் இவ்வுலகில்
என் மனவெட்டுகளுக்கு
மருந்தாக வேண்டும் அவள்!

எத்தனை பேருடன் அவள்
'உறவு' கொண்டாலும்
எனக்குக் கவலையில்லை......
ஆனாலும் ஒருமுறை
கண்டிப்பாக அவளுடன்.....

எத்தனை ஆண்(தேனீக்)களுடன்
அவள் உறவு கொண்டாலும்
எனக்குக் கவலையில்லை!
அந்த ராணி(தேனீ)யின்
ஒருநாள் உறவுக்காக
வாழ்நாள்வரை காத்திருப்பேன்!

இருந்தாலும் ஒரு சின்ன கோபம்
இவ்வளவு தூரம் வந்தவள்
என்னைப் பார்க்காமல்
போய்விட்டாளென்று.........

யோகி சொன்னான்.
இங்கே முகம் தெரிந்த
காதல்களே சேர்வதில்லை.....
.
.
.
அது சரி அப்புறம்.......

போகி சொன்னான்.
ஒதுக்கப்பட்டவனாய்
அமர்ந்தேன் தனியறையில்.
கொஞ்சம் ஒதுக்கி வைத்தேன்
ஆறாம் அறிவை.
மனிதனாய் இல்லாமல் யோசித்தேன்
புரிந்தது உண்மை.
கனவுக்கன்னியும்
மோசமான ஆசான் தான்
அவளைப் பற்றிய
அனுபவமில்லாமல்
அனுபவித்து
அனுபவித்தபின்
அனுபவம் சொல்வதற்குள்
அனுசரனை காட்ட மறுப்பவள்!
பிறகுதான் தெளிந்தேன்
கனவுக்கன்னியைத் தேடுவது
அறிவீனமென்று!
ஆனாலும்
அவளை
நான் மறந்த ஒரு நாளில்
நிச்சயம் வருவாள்
என்னைத்தேடி!

என்முன் அவள்
இடையில்லாமல் பாவாடைகட்டி
'பிரசன்னா'மாகும் வேளையில்
அவள்தான் எல்லாம் எனக்கு
என்றான பிறகு
'சத்தியா'மாகச் சொல்கிறேன்
(சு)மதி, வான்(மதி),
அடைக்கலம், ஆரோக்கியா, ஐஸ்(வர்யா),
பல்லவி, அஞ்சலி, ஜோதி,
தீபா(ம்), கீதா(ம்), சங்(க்)கீதம்,
ரோஜா, புஷ்பம், சோபியா,
சாந்தி, கமலா
இதுபோன்ற மானுடப் 'பிறவி'கள்
'பிரியா'க் கிடைத்தாலும் ஏற்கமாட்டேன்.
ஆண்டாண்டுகாலமாய் அழுதுபுரண்டாலும் கூட!

நான் பிறந்தபோது
என் தாயை நலம் விசாரித்த
என் கனவுக்கன்னி,
என்னைப் பிடிப்பதாகச் சொல்லும்
அந்த ஒரு நாளில்
அவளைப் பிடிப்பதாகச் சொல்ல
எனக்குத் தைரியமில்லை!

அந்த ஒரு நாளில்....

அட!
எங்கே போனார்
இந்த யோகி?

மரணதேவதை!
உன்னைப் பற்றிய
நினைவுகளைப் பகிரவே
யாரும் தயாரில்லை.
ஆதலால்
காதலிப்பேன் உன்னை.
என்னிடம் நீ
காதல் சொல்லும் மட்டும்!

-ஞானசேகர்(போகி)

(காதலி சந்திக்காத வரையில் போகிகள் சாவதில்லை)

2 comments:

Snehan & Mesalin said...

good, continue

J.S.ஞானசேகர் said...

போகி நினைத்தவை:

1) 'உடம்பைப் பற்றி கவலைப்படாதவள்' - உண்மைதானே?
யாராவது இக்கவிதையை இரண்டு முறை படித்து இருந்தால், போகி ஜெயித்துக்கொண்டு இருக்கிறான்.

2) //எத்தனை ஆண்(தேனீக்)களுடன்
அவள் உறவு கொண்டாலும்
எனக்குக் கவலையில்லை!
அந்த ராணி(தேனீ)யின்
ஒருநாள் உறவுக்காக
வாழ்நாள்வரை காத்திருப்பேன்!//
ராணீத்தேனியுடன் உறவு கொண்டால், ஆண்தேனீயின் ஆயுள் முடிந்துவிடும்.

3) இடையில்லாமல் பாவாடை = பாடை

4) பல பெண்களின் பெயர்களின் அர்த்தத்தைப் (சோபியா = கடவுளின் அருள்) போகி நன்கு பயன்படுத்திக் கொண்டான். எத்தனை பேருக்கு அவர்களின் பெயருக்கு அர்த்தம் தெரியும்?

-ஞானசேகர் (போகி)