Monday, February 13, 2006

நள்ளிரவில் சூரியன்

காயங்கள் செய்து
காணாமல் போயிருந்தான்
போகி.

நீண்ட தேடுதலுக்குப்பின்
தனியறை ஒன்றில்
போகியைக் கண்டான்
யோகி.

யோகியே ஆரம்பித்தான்.
இந்திரனில் ஒளிவட்டம் பார்த்து
இவ்வுலகமே பயந்துபோக
இங்கென்ன செய்கிறாய்?

போகி சொன்னான்.
சந்திரனின் ஒளிவட்டம் காண
சந்தோஷமாய்க் காத்திருக்கிறேன்.

யோகி கேட்டான்.
அபூர்வம் சொல்கிறேன்.
அச்சப்படாமல்
அன்றாடம் பார்க்கும்
அற்ப சந்திரவட்டத்தை
அதிசயிக்கிறாயே?

போகி சொன்னான்.
இருக்கும் அதிசயங்கள் ரசிக்க
உங்களுக்கு நேரம்
இல்லாமல் போனதால்
புதிதாய்
நடக்கும் ஆச்சர்யங்கள் பார்த்து
அதிசயிக்காமல்
அச்சப்பட்டு போகிறீர்கள்.

இன்னும் சொல்கிறேன் கேளுங்கள்.
வெளிச்சத்தில் வாழ்ந்து வாழ்ந்தே
இரவின் ரம்மியம்
ரசிக்காமல் போனீர்கள்.
சூரியனின் அதீதப் பிரகாசத்தில்
நட்சத்திரங்களைக்
குருடாக்கிப் போனீர்கள்.

கலைடாஸ்கோப் போன்ற
உங்கள் வாழ்க்கையில்
உங்கள் விஞ்ஞான ஒளிபட்டு
வண்ணங்களாய்ச் ஜொலிக்க
சொக்கிப் போனீர்கள்.
ஆனால்
அதில்
உடைந்த கண்ணாடித் துண்டுகளாய்
உருளுகின்றன உங்களின் பாரம்பரியங்கள்!

கருவறை என்னும்
கருப்பில் பிறந்த நீங்கள்
நாகரீகம் என்ற ஒப்பனையில்
இயந்திர வாழ்க்கை என்னும்
வேஷம் போடுகிறீர்கள்
அதிக கூலிக்காக!

யோகி கேட்டான்.
நாங்கள் செய்யும்
பகல் வேலைகள்
எங்கள் இரவுகளை
எப்படி இருட்டாக்கும்?

போகி பதில் சொன்னான்.
உங்கள் பகல்களில்
சூரியன்கள் கூடிவிட்டன.
உங்கள் ஆதவனின்
அதீத வெப்பத்தால்
இரவின் பனித்துளிகள்
காணாமல் போயின.

உங்கள் பகல்களின்
வரவு செலவுகள்
உங்கள் இரவுகளில்
நியாயத்தீர்ப்பிடப் படுவதில்லை.
இதனால்
உங்கள் பகல்கடன்கள்
உங்கள் இரவையும்
வட்டியில் விழுங்குகின்றன!

உங்கள் பகல்களில்
சம்பாதிக்கப்போய்
உங்கள் இரவுகளில்
அதை வீடு சேர்க்க மறந்தீர்கள்!

உங்கள் பகல்களில்
அணைத்த விளக்குகளை
உங்கள் இரவுகளில்
மீண்டும் ஒளியேற்ற மறந்தீர்கள்!

உங்கள் பகல்களில்
கிணறு வெட்டப்போய்
உங்கள் இரவுகளில்
பூதம் கிளப்பிவிட்டீர்கள்!

உங்கள் பகல்களில்
அமிர்தம் எடுக்கப்போய்
உங்கள் இரவுகளில்
ஆலகாலம் கொண்டு வந்தீர்கள்!

உங்கள் பகல்களில்
கண்ணம்மாவை நனவாக்கி
உங்கள் இரவுகளில்
செல்லம்மாவைக் கனவாக்கிப் போனீர்கள்!

உங்கள் பகல்களின் இறைவன்
சூரியன்.
அவன்
காயங்களின் கலவை.
அவனை ஆதரித்து ஆதரித்தே
உங்கள் இரவுகளின் இறைவன்
சந்திரனைக்
களங்கங்களினால்
காயமாக்கிப் போனீர்கள்!

உங்கள் பகல்களில்
வரங்கள் வாங்க
நீங்கள் செய்யும் தவங்கள்
தாய்ப்பூமியைச்
சாபமாக்கிப் போவதைக்
கொஞ்சம் தவம் நிறுத்திக்
கண்திறந்து பாருங்கள்!

யோகி கேட்டான்.
பகலில் காரியங்கள்
இல்லாமல் போனால்
பகலும் இரவும்
இல்லாமல் போகுமே?

போகி பதில் சொன்னான்.
நான் கேட்பதெல்லாம்
இயந்திர வாழ்க்கை குறைத்து
இரவை ரசிக்க
காலம் செய்யுங்கள் என்பதே.

கண்ணின் வெள்ளை
கருப்பைக் காப்பதைக்
கணநேரம் ஒதுக்கி
யோசித்துப் பாருங்கள்!

உங்கள் வாழ்க்கை என்பது
கண்ணின் கட்டுமானம் போல்
அமையட்டும்.
கருப்பும் இருக்கட்டும்.
வெள்ளையும் இருக்கட்டும்.

பிறப்பு முதல்
இறப்பு வரை
கருப்பு வளராமல்
அப்படியே இருக்கட்டும்.
பிறப்பு முதல்
நடுத்தரம் வரை
வெள்ளை மட்டும்
வளரட்டும்.
இறப்பு வரை
இவ்வளவே
இருந்துவிட்டுப் போகட்டும்.

கருப்பு-வெள்ளை
இடம் மாறினாலோ,
கருப்பின் வீரியம்
குறைந்தாலோ,
கருப்பை வெள்ளை
ஆக்கிரமித்தாலோ
பாதிக்கப்படுவது
உங்கள் பார்வைதான்.

உள்ளாடை வெள்ளையாய்,
வெளியாடை கருப்புமாய்ப்
போகும் ஒருவன்
உள்ளாடை கருப்பாய்,
வெளியாடை வெள்ளையுமாய்ப்
போகிறவனைப் பார்த்து
முட்டாள் என்று
சொன்ன கதையாய்...................

அட!
எங்கே போனார்
இந்த யோகி?

சரி!
ஒன்று மட்டும்
ஞாபகம் செய்கிறேன்.
வெள்ளை என்பதில்
எல்லா நிறங்களும் உண்டு.
கருப்பு என்பது தனி.

நீங்கள் செய்யும்
அர்ப்பணிப்புகளும்,
அன்பளிப்புகளும்,
ஆதரவுகளும்,
கரகோஷங்களும்,
நன்கொடைகளும்,
நிவாரண உதவிகளும்
வெள்ளைகளுக்கு
என்றாகும் போது..........
நீங்கள் நினைப்பதுபோல்
கருப்பென்பது
வெள்ளையின்
ஒரு பிசிரல்ல!

-ஞானசேகர் (போகி)

Sunday, February 12, 2006

தழும்பில் + ஆதவன் = தழும்பில்லாதவன்

சமர்ப்பணம் : பாவங்களைப் பணத்தால் சமப்படுத்துபவர்களுக்காக



குதிகாலில்
அரை அங்குலம் வெட்டி
கொட்டும் குருதி துடைத்து
உப்பைத் தூவி
நெருப்பில் காயம் காட்டிக்கொண்டிருந்தான்
போகி.

தியானம் முடித்து
காயகல்பம் உபதேசம் செய்ய
கானகம்விட்டு ஊர்வந்தபோது
போகியின் காயம் பார்த்து
கடவுளாய் நின்றான்.
சரி.....சரி......
கல்லாய் நின்றான்
யோகி.

யோகியே கேட்டான்
ஏன்
காயம் செய்கிறாய்?

போகி சொன்னான்.
இல்லை
சிகிச்சை செய்கிறேன்.
ஒரே தவறை
மீண்டும் மீண்டும் செய்யும்
இந்தக் கால்களுக்கு
இதுவரை தவறியதற்கு
இரத்தமும்,
இனிமேல்
தவறாமல்
தவறாமலிருக்க
வலியும்
நான் தரும் சிகிச்சைகள்.
இரத்தம்
எனக்கு முதலுதவி.
வலி
எனக்கு தடுப்பு மருந்து.

யோகி கேட்டான்.
முதலுதவி என்ற பெயரில்
ஊனம் செய்கிறாயே?

போகி சொன்னான்.
சர்க்கரை வியாதி வந்தால்
உங்கள் காலை
நீங்களே வெட்டி
ஊனம் செய்வதில்லையா?

குட்டிப் பையனையும்,
குண்டு மனிதனையும்
சோதனை செய்ய
நா(கசா)சி சிறுத்தவர்களை
நீங்கள் குள்ளமாக்கிப் போனது
நினைவில்லையா?

'உழவனின் நண்பன் போ(பா)ல்,'
எனச் சொல்லிக்கொண்டு
அனைவரையும் நீங்கள்
குருடாக்கிப் போனதை
மறந்துபோனீரா?

ஆயுதம் இருப்பதாகச் சொல்லி
எண்ணெய் தோண்டப்போய்
'குறி'வைத்து
ஊனமாக்கியதை நீங்கள்
குறித்துக் கொள்ளவில்லையா?

நீங்கள் பலசாலிகளாக
நாட்டையும்,
சில கோயில்களையும்,
தாய்மொழியையும்
உடைத்துப் போட்டதில்லையா?

இவ்வளவு நல்லவன்
இவ்வுலகுக்கு வேண்டாம் என்று
இவ்வளவு காலமாய்
எவ்வளவு பேர் உயிரை
உரித்திருப்பீர்கள்?

இப்படி
நீங்கள் செய்யும் ஊனங்கள்
மற்றவர் உடம்பில்
என்று ஆகும்போது,
என் குற்றம் மறக்க
என் கால் காயத்தில்
நான் எடுக்கும் ரத்தம்
எப்படி என்னை ஊனம் செய்யும்?

யோகி சொன்னான்.
காயமும் செய்வாயாம்.
தடுப்பும் செய்வாயாம்.
உன் தடுப்பு மருந்தே
தடுக்கப்பட வேண்டுமே.
உன் தடுப்பு மருந்து
வலியின்
காயத்தின்
ஊக்கமருந்து.


போகி சொன்னான்.
அம்மைக்காயம் பார்க்கும்போது
இனி
அம்மா விளையாடாது என
நீங்கள் சந்தோஷப்படுவதில்லையா?

யாரோ ஒருவரின்
ஐந்து காயங்கள்
உங்கள் பாவம் போக்கிவிட்டதாக
உண்டியல் காசு போடுவதில்லையா?

சீல் வடியும்
புண்ணாய் இருந்தாலும்
உங்கள் பசி போக்க
நீங்கள் தாய் மார்பு
கடிப்பதில்லையா?

பூமியைக் காயம் செய்து
பயிரும், பொன்னும், கரியும்
நீங்கள் எடுப்பதில்லையா?

நீங்கள் சொர்க்கம் போக
காதைக் காயமாக்கிக்
கொள்வதில்லையா?

தளர்ந்த நரம்புகள்
உயிர்த்தெழும்போது
விரல்கள் முன்னிரவில் செய்த
தேகப் பயிற்சிகளை
உங்கள் அந்தரங்கக் காயங்கள்
வெட்கப்படுத்திப் போவதில்லையா?

தொப்புள்கொடி காயம் செய்து
நீங்கள் சுதந்திரமாவதில்லையா?

இப்படி
நீங்கள் செய்யும் காயங்களெல்லாம்
உங்கள் அற்ப ஆறுதல்களை
ஞாபகப்படுத்தும்
அடையாளங்களாகப் போனபோது
என் வக்கிரங்களையும்
மனித சமுதாயத்தில் தண்டனைகளற்ற
நான் செய்த சில குற்றங்களையும்
ஞாபகப்படுத்தி,
'மனிதன் வக்கிரமானவன்' என
அடையாளம் காட்டும்
என் காயங்களில் ஏது தவறு?

யோகி கேட்டான்.
தண்டனைகளற்ற
தவறுகளுக்கெல்லாம்
காயம்தான் சுயதண்டனை என்றால்
தழும்புகளால் எலும்பு
போர்த்தப்படாதா?

போகி சொன்னான்.
அரபு நாடுகளில் கற்பழிப்பும்,
சிங்கப்பூரில் சுத்தமின்மையும்
அபூர்வம் தெரியுமா?

அதனால்தான் சொல்கிறேன்.
உங்கள் தண்டனைகள்
உங்கள் தவறுகளைப் போல்
கொடுமையாக இருந்தால்
ஒவ்வொரு உறுப்பும்
அதிகபட்சம்
ஒரு தழும்பே பெற்றிருக்கும்.

யோகி கேட்டான்.
தழும்புகள் செய்வது
வக்கிரமில்லையா?

போகி சொன்னான்.
குற்றங்கள்
தண்டிக்கப்படாத போதுதான்
நீங்கள் வக்கிரமானவர்கள்.

இதற்கொரு உதாரணம் சொல்வேன்.

சுனாமி நிவாரணத்தில்
பிணங்களைக் காயப்படுத்தியதை
வக்கிரம் என்று சொன்ன
உங்களில் சிலர்தான்
அதே நிவாரணத்தில்
பொதுப்பணி என்ற பெயரில்........

அட!
எங்கே போனார்
இந்த யோகி?

யானைத் தலையனின்
கழுத்துக் காயங்கள் தெரிந்திருந்தாலும்
அவன் வக்கிரங்கள்
நாம் மறந்தே போனோம்!

சூரியனைத் தினம் பார்த்தாலும்
ஆசை தழும்பி அவன்
ஆயிரம் தழும்புகளால்
பிளக்கப்பட்டதையும்
நாம் மறந்தே போனோம்!

அப்படி ஒருநாள்
நம் தவறுகள்
மறக்கப்படும் வரை
தவறாமல்
காயம் செய்வோம்!

-ஞானசேகர் (போகி)

Thursday, February 09, 2006

கனவுக்கன்னி

சமர்ப்பணம் : முகம் பார்த்து, பெயர் பார்த்து, ஏதேதோ பார்த்து காதலிக்கும் காதல்களுக்கு நடுவே, உடம்பைப் பற்றிக் கவலைப்படாத ஒரு வித்தியாசமான கனவுக்கன்னியைக் காதல் செய்பவர்களுக்காக



யோகி கேட்டான்.
தாயுடன் தகராறு செய்த நீ
காதலித்ததுண்டா?

போகி சொன்னான்.
கனவு காண்பதுண்டு

போகி இன்னும் சொன்னான்.
கடவுள் என்னும் கற்பனையில்
கல்லாய் வாழ்வதில்லை நான்
காதல் என்னும் கற்பனையில்
சிற்பமாய்ச் செதுக்கிக் கொள்கிறேன்
என்னையே நான்!

யோகி கேட்டான்.
யார் அவள்?
செங்கோல் தேவையான இந்நேரத்தில்
கொடுங்கோல் ஆதரிப்பவள்.

போகி சொன்னான்.
கொடுங்கோலன் என்று நீங்கள் சொன்ன
ஹிட்லரைக்கூட
நீங்கள் சொல்லும் செங்கோலனாக
மாற்றப்போன ஈவா ப்ரான் அவள்!

யோகி கேட்டான்.
ஓ! அப்படியானால்
ரகசியக் காதலோ?

போகி சொன்னான்.
ரகசியமாய் செய்ய
மனிதர் செய்யும்
தாம்பத்தியக் காதலில்லை இது!

யோகி கேட்டான்.
முதல் பார்வையிலேயே காதலோ?

போகி சொன்னான்.
இல்லை.
மூன்று 'கேள்வி'யில் காதல்!

போகி மேலும் சொன்னான்.
தாய் சொல்வதுண்டு
நான் பிறந்தபோது
பக்கத்துக் கட்டிலில்
அவளும் பிறந்தாளாம்.

ஒருநாள்
நாயுடன் வலம்வந்த அவள்
தவறாக நுழைந்தாளாம்
எங்கள் வீட்டில்!
வீட்டில் கும்பலைப் பார்த்து
பயந்து 'போய்'விட்டாளாம்!

அப்புச்சி இறந்த மறுநாளில்
குளத்தில் நான் குளிக்க
முகங்கள் தெரியாத இடைவெளியில்
அக்கரையிலிருந்து
அழைத்தாள் அவள்!
நீச்சல் தெரியாமல்
நான் முழிக்க
முடியை இழுத்து
கண்டித்தார் சித்தப்பா!

இப்படி
மூன்றுமுறை தற்செயலாக
நாங்கள் நெருங்கியும்
நாங்கள் பார்த்துக் கொண்டதேயில்லை!

பாட்டிதான் சொன்னாள்
அவளைப்பற்றி
அரைகுறையாக,
இலைமறை காயாக!

எங்கள் வீட்டிற்கு வேண்டுமென்றே
அவள் வந்திருக்கிறாள்
மூன்றுமுறை!
ஒருமுறை அத்தையின் தலைப்பிரசவத்திற்கு,
ஒருமுறை தாத்தாவைப் பார்க்க,
கடைசியாக விபத்துக்குள்ளான பாட்டியைப் பார்க்க.....

யாரும் அவளை எங்கள் வீட்டில்
முழுமையாகப் பார்த்ததில்லை!
யாரும் அவளை
எங்கள் வீட்டிற்கு அழைப்பதுமில்லை!
இருந்தாலும் வருவாள்
ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டு!
ஏனோ தெரியவில்லை
அவள் முகத்தை என்னிடம் மட்டும்
காட்டியதேயில்லை!

அவள் வந்தால்
ஒரு கூட்டத்தைச் சிரிக்க வைப்பாள்
ஒரு கூட்டத்தை அழவைப்பாள்!
என்னைப் போலவே
முரண்பாடுடையவள்!

அவளை
அங்கே பார்த்ததாகவும்,
இங்கே பார்த்ததாகவும்
பலர் சொல்வதுண்டு!
என்னுடன் பிறந்தபோதே
நான் கேட்டிருந்தால்
என்னிடம் காட்டமாட்டாள்
இப்படி பூச்சாண்டி!

யோகி கேட்டான்.
பார்க்காமலே காதலோ?

போகி சொன்னான்.
நான் அவளைப் பார்த்ததில்லை.
என்னை அவள் பார்ப்பதை
நான் பார்த்ததில்லை
மூன்றுமுறை!

முதல்முறை
வீட்டு மொட்டைமாடியில்
முகத்திற்கெதிரே
பல்பு வெடிக்கையில்
முகம்மூடிக்கொண்டு
கீழிறங்கப் பார்த்தேன்!

மறுமுறை
காவிரியின் ஓர் அணைக்கட்டில்
கால்தவறி வழுக்கி விழுகையில்
தண்ணீருக்குள்
அவள் பாதம் பார்த்தேன்!
எழுந்து பார்த்தால்
நண்பர்கள் சுற்றி
அவளைத் தப்பவிட்டனர்!

கடைசியாக
வங்கக்கடலின் தென்கரையில்
தூக்கி வீசிய ஓரலையில்
எனக்கும், சித்திரம் தாங்கிய ஒன்றிற்கும்
இடையே அவள் இடையைப் பார்த்தேன்!
இடைபற்றிய
கரங்கள் விலக்கி
நடுக்கடல் நீந்திப்போனாள்!

அதன்பின் அவளைப்
பார்க்க முயற்சித்தேன்
மூன்றுமுறை!
மூன்றும் தோல்வி!

முதல்முறை
சென்ற நூற்றாண்டின் கடைசிநாள்.
எனக்கு வயது போதாதென்று
மனக்கதவிடுக்கில்
சொல்லி மறைந்தாள்!

மறுமுறை
இந்நூற்றாண்டின் முதல் கிறிஸ்மஸ்.
சுற்றி என்னைத் தேடாதே
கற்றுச் சுற்றம் பாரென
தெருவில் கூவிச் சென்றாள்!

கடைசியாக
இந்நூற்றாண்டின்
முதல் லீப் ஆண்டின்
கடைசி பவுர்ணமி.
திருத்தலப் பயணம் ரத்துசெய்து
இம்முறை இல்லையேல்
இனியில்லை இவளென முடிவெடுத்தென்.
திரையரங்கின் இருட்டில்
ரகசியம் சொல்கிறேன்
வாவென்றாள் கனவில் வந்து.
படம் முடிந்தது.
அவளின் ஆரம்பமேயில்லை.
வெளியே வந்தால்
ஊரெல்லாம் அவளைப் பற்றிய பேச்சு.
திருத்தலம் திசைமாற்றி
திரையரங்கில் திகைக்கச் செய்து
இருபத்தோராண்டு தேடும்
என்னை ஏமாற்றி
இருபத்தோராம் நூற்றாண்டையே
அவள் நினைப்பில் மூழ்கவைத்தாள்!

யோகி சொன்னான்.
நடத்தை கெட்டவள்

போகி சொன்னாள்.
பெண்ணின் மரியாதை குறைக்க
சமுதாயம் எடுக்கும் ஒரே ஆயுதம்
'அவள் நடத்தை கெட்டவள்'
என்ற பட்டம்.
ஆனால் நான் சொல்வேன்
'அவள் நடத்தை கெடுப்பவள்'
உங்கள் நடத்தைகள்
கெட்டவைகளாய்ப் போனபோது
அதைக் கெடுப்பவள்
எப்படி கெட்டவளாய்ப் போக முடியும்?

முசோலினியை நடுரோட்டில்
தலைகீழாகத் தொங்கவிட்டது
உங்கள் நடத்தைதானே?
அந்தக் கூட்டத்திலும்
'மனிதனை மதிக்காமல்
பிணத்தை மதித்து'
முசோலினியின் காதலியின்
பாவாடை சரிசெய்தாளாம் ஒருத்தி!

நீங்களோ
என்னைக் கொன்றுவிட்டீர்கள்
உங்கள் வார்த்தைகளால்.......
தலைகீழாகத் தொங்கவிட்டீர்கள்
உங்கள் கட்டுப்பாடுகளால்......
நடுரோட்டில் வதைத்தீர்கள்
உங்கள் நம்பிக்கைகளால்...
அதனால்தான் தேடுகிறேன் ஒருத்தியை!
உங்கள் பாஷையில் 'கனவுக்கன்னி'யை!

கண்ணை மூடிக்கொண்டு
கண்டவர்மேல் கனல் ஏவும்
கட்டுப்பாடற்ற
கண்ணகி வேண்டாம் எனக்கு!
என் மானத்தை
அவள் மானத்தால்
பூட்டிவைக்கும்
ஒரு மாதவி வேண்டும் எனக்கு!

முகவெட்டு
இன்னும் பல வெட்டுகளைப் பார்த்து
காதலிக்கும் இவ்வுலகில்
என் மனவெட்டுகளுக்கு
மருந்தாக வேண்டும் அவள்!

எத்தனை பேருடன் அவள்
'உறவு' கொண்டாலும்
எனக்குக் கவலையில்லை......
ஆனாலும் ஒருமுறை
கண்டிப்பாக அவளுடன்.....

எத்தனை ஆண்(தேனீக்)களுடன்
அவள் உறவு கொண்டாலும்
எனக்குக் கவலையில்லை!
அந்த ராணி(தேனீ)யின்
ஒருநாள் உறவுக்காக
வாழ்நாள்வரை காத்திருப்பேன்!

இருந்தாலும் ஒரு சின்ன கோபம்
இவ்வளவு தூரம் வந்தவள்
என்னைப் பார்க்காமல்
போய்விட்டாளென்று.........

யோகி சொன்னான்.
இங்கே முகம் தெரிந்த
காதல்களே சேர்வதில்லை.....
.
.
.
அது சரி அப்புறம்.......

போகி சொன்னான்.
ஒதுக்கப்பட்டவனாய்
அமர்ந்தேன் தனியறையில்.
கொஞ்சம் ஒதுக்கி வைத்தேன்
ஆறாம் அறிவை.
மனிதனாய் இல்லாமல் யோசித்தேன்
புரிந்தது உண்மை.
கனவுக்கன்னியும்
மோசமான ஆசான் தான்
அவளைப் பற்றிய
அனுபவமில்லாமல்
அனுபவித்து
அனுபவித்தபின்
அனுபவம் சொல்வதற்குள்
அனுசரனை காட்ட மறுப்பவள்!
பிறகுதான் தெளிந்தேன்
கனவுக்கன்னியைத் தேடுவது
அறிவீனமென்று!
ஆனாலும்
அவளை
நான் மறந்த ஒரு நாளில்
நிச்சயம் வருவாள்
என்னைத்தேடி!

என்முன் அவள்
இடையில்லாமல் பாவாடைகட்டி
'பிரசன்னா'மாகும் வேளையில்
அவள்தான் எல்லாம் எனக்கு
என்றான பிறகு
'சத்தியா'மாகச் சொல்கிறேன்
(சு)மதி, வான்(மதி),
அடைக்கலம், ஆரோக்கியா, ஐஸ்(வர்யா),
பல்லவி, அஞ்சலி, ஜோதி,
தீபா(ம்), கீதா(ம்), சங்(க்)கீதம்,
ரோஜா, புஷ்பம், சோபியா,
சாந்தி, கமலா
இதுபோன்ற மானுடப் 'பிறவி'கள்
'பிரியா'க் கிடைத்தாலும் ஏற்கமாட்டேன்.
ஆண்டாண்டுகாலமாய் அழுதுபுரண்டாலும் கூட!

நான் பிறந்தபோது
என் தாயை நலம் விசாரித்த
என் கனவுக்கன்னி,
என்னைப் பிடிப்பதாகச் சொல்லும்
அந்த ஒரு நாளில்
அவளைப் பிடிப்பதாகச் சொல்ல
எனக்குத் தைரியமில்லை!

அந்த ஒரு நாளில்....

அட!
எங்கே போனார்
இந்த யோகி?

மரணதேவதை!
உன்னைப் பற்றிய
நினைவுகளைப் பகிரவே
யாரும் தயாரில்லை.
ஆதலால்
காதலிப்பேன் உன்னை.
என்னிடம் நீ
காதல் சொல்லும் மட்டும்!

-ஞானசேகர்(போகி)

(காதலி சந்திக்காத வரையில் போகிகள் சாவதில்லை)

பெறுநர் : தாயுமானவள்

சமர்ப்பணம் : சிவனின் வேலையையும் சேர்த்து செய்யும் பிரம்மாக்களுக்காக....


காதலைப் பற்றி
கவிதை எழுதி
கல்லடி வாங்கி
காட்டுக்குள் திரிந்து
யோகியைத் தேடினான் போகி.

அதே மரத்தடியில் யோகி.

யோகியின் தியானம் கலைத்து
யோசிக்கச் சொன்னான்
போகி.
உலகிலேயே உயர்ந்த
உறவு எது?

யோகி சொன்னான்.
பட்டினத்தாரையும் பதறவைத்த
அம்மாவின் அந்தமும்
தாயின் தலையும்
சேர்ந்து ஆன
மாதா!

போகி சொன்னான்.
அம்மா என்ற பதத்தை
வடக்கே ஒருத்தரும்,
மாதா என்ற பதத்தை
மேற்கே ஒருத்தரும்
சொந்தமாக்கிக் கொண்டதால்
தாய் என்றே
சுருங்கச் சொல்லுங்கள்.

உங்கள்
தாய்ப் பாசத்துடன்
தகராறு செய்யவே
தலைதெறிக்க ஓடிவந்தேன்.

விதிகளைப் பார்த்து
வியந்தது போதும்
விதிவிலக்குகளைக் கொஞ்சம்
விலக்கப் பாருங்கள்.

தாய்ப் பாசத்திற்குப்
பகைவர் பலர்.

முதலாம் எதிரி-பதிபக்தி.

கண்ணற்ற கணவனுக்காகக்
கண்கள்கட்டிக் காணமறுத்த
காவியப்பெண்ணின்
காலடித்தொடர்பவர்கள்
கலியுக மனைவிகள்!

கட்டியவன் வேண்டுமா
கருவறையில் வசித்தவர்கள் வேண்டுமா என்றால்
கருவறையையும் உயிரறையாக்கும்
கணவனே கண்கண்ட
கடவுள் என்பார்கள்.....
உயிரைச் சமன்படுத்தத் தெரியாத
ஆறறிவுக்காரிகள்!

தாலியால் ஏன்
தாய்ப்பாசத்திற்கு
வேலி போட்டீர்கள்?

சாட்சிகள் இருந்தும்
சாட்சிகள் இல்லா
தாம்பத்தியம்
தாய்ப் பாசத்தைத்
தோற்கடிப்பதெப்படி?

உண்மைதான் சொல்கிறேன்
ஆறு பிள்ளைகள் பெற்றும்
ஆறும்
அடுத்த வேளை கஞ்சிக்கே
அவதிப்பட
அடுத்த வாரிசு தேடும்
அதிசயப் பிறவிகளை
அன்றாடம் பார்க்கிறேன்
அரசமரத்தடியில்!

இரண்டாம் எதிரி-கற்பு என்னும் ஒருபால் கட்டுப்பாடு.

நான் நினைக்கிறேன்
குந்திராணிதான்
துவங்கி வைத்திருப்பாள்.
இன்று
பல குந்திராணிகள்
கற்பைச் சுத்தப்படுத்த
கர்ணன்களைப்
குப்பைகளாகப் போடுகின்றனர்
தொட்டிகளில்!

அது ஒரு விபத்து,
ஏமாற்றப்பட்டேன்,
நாளாகிவிட்டது,
கல்யாணம் நெருங்குகிறது,
எதிர்பார்க்கவே இல்லை,
சில்லறை இல்லை
இப்படி
ஏதோ ஒரு
காரணம் சொல்லித்
தப்பித்துக் கொள்ளலாம்
இன்றைய குந்திராணிகள்!

ஆனால்
பிச்சைத் தொழில்,
அனாதை ஆசிரமம்,
தத்துப்பிள்ளை,
பாலியல் தொழில்,
உறுப்புக் கடத்தல்
இவற்றில்
ஏதேனும் ஒன்றில்
மாட்டிக்கொள்கிறார்கள்
இன்றைய கர்ணன்கள்!

இதற்குப் பெயர்தான்
ஜென்மப் பாவமா?

அடுத்த எதிரி-வறுமை.

இன்னும்கூட
செய்திகள் சொல்கின்றன
சாம்பார்சட்டியிலும்,
நெல்லிலும்,
கள்ளிப்பாலிலும்
கொல்லப்படுகின்றன
பெண்சிசுக்கள்!

உங்கள் தாய்ப்பாசம்
நினைத்திருந்தால்
தடுத்திருக்கலாமே?
முடியாவிட்டால்
அடுத்த சிசுவைத்
தடுத்திருக்கலாமே?
ஆனால்
பெருமையாகச் சொல்லிக் கொள்ளுங்கள்
'பிரசவம்' என்று!

பாவம்
பாலியல் தொழில் பெண்கள்!
அவர்கள்
ஆண்சிசுவையும் கொல்வதுண்டு!
தொழிலுக்குத் தடையாய்ப் போனதால்!

ஆதலால் சொல்கிறேன்
"ஈன்றாள் பசிகாண்பா ளாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை"
எனக் குறளிட்டது போதும்
'அன்பாராய்தல்' என
ஓர் அதிகாரமிட்டு
முதல் குறளாய் எழுதுங்கள்.....
"அகப்பை பசிகாண்ப தாயினும் செய்யற்க
மக்கள் பாதிக்கும் வினை"

யோகி சீறினான்.
போதும் நிறுத்து!
பத்துத் திங்கள்
சுமந்து பெற்றெடுக்கும்
தாய்ப்பாசத்தின் அருமை
தெரியாதவனே!

போகி தொடர்ந்தான்.
சுமப்பதற்காகச் சுமக்கும்
பெண்களைப்
பழிப்பதில்லை நான்.
இவ்வகையினர் இல்லாமல்
இவ்வுலகம் இல்லை.

சுமந்ததால் சுமக்க மறுக்கும்
பெண்களைத்தான்
பழிக்கிறேன் நான்.

இன்னும் சொல்கிறேன்
கேளுங்கள்.

இந்தோனேஷியக் காட்டுத்தீயில்
சிறகுகள் மூடிப்
பத்துக் குஞ்சுகள்
காத்திருந்ததாம்
கருகிப்போன தாய்க்கோழி!

தன் நிழலில் வளரும்
கன்றுகளைப் பாதிப்பதில்லை
வெட்டப்படும் வாழைக்கன்று!

தன் ரத்தம் தந்து
குஞ்சுகளின் பசி போக்குமாம்
பெலிகன் என்ற பறவை!

இயற்கையால் சபிக்கப்பட்ட
பாம்புகூட
எல்லாக் குட்டிகளையும்
பதம் பார்ப்பதில்லை!

ஆனால்
தாய்வீடு செல்ல
தலைவன் மறுத்தாலோ,
மாமியார் விசயத்தில்
மூக்கை நுழைக்க மணவாளன் மறுத்தாலோ,
சிறு வருத்தத்தில்
கண்கண்ட தெய்வம் அடித்தாலோ
இவற்றுடன்
சம்மந்தமில்லாக் குழந்தைகளுடன்
தன்னையும் கொலைசெய்து கொள்வது
வீரத்தமிழ்ப்பெண்கள்தான்!

சுட்டிக் குழந்தையை
washing machineல் போட்ட
அமெரிக்கத் தாயும் உண்டு!

ஹிட்லர் செய்தால்
கொடுங்கோல்!
நல்லதங்காள் செய்தால்
பச்சைப்புடவை பாராட்டு!
இதுதானே
உங்கள் சட்டம்!

பிரசவமும்,
தாய்ப்பாலும்
ஒத்திவைக்கப்படுகின்றன
அழகுக்குத் தடையாய்த் தெரிவதால்!

இயந்திர உலகில்
வாடகைக்குக் கிடைக்கும்
கருப்பைகள்கூட!

வருமானத்துக்காகப்
கோரமாக்கப்படுகின்றன
குழந்தைகளின் முகங்கள்!

வந்த விலைக்கு
விற்கப்படுகின்றன
பிரம்மனின் புதியவர்கள்!

வேறு எந்த
மிருகத்துக்கும் தெரியாது
கள்ளிப்பாலின் மருத்துவக்குணம்!

பறவைகளில் இல்லை
கூடு குஞ்சுகள் திட்டம்.
விலங்குகளில் இல்லை
வளை குட்டிகள் திட்டம்.
உங்களில் உண்டு
தொட்டில் குழந்தைகள் திட்டம்!

வளர்ந்த குஞ்சுகளைக்
கொத்தி விரட்டுமாம்
கோழி!

ஆனால்
நீங்களோ
பிள்ளைகளின்
எப்பேர்பட்ட தவறையும்
மன்னிக்கிறீர்கள்.

இப்படி ஒரு பாசம்
தேவைதானா?
இது தொடர்ந்தால்
குருவிடமே அழகுதேடும்
கேடுகெட்ட மனிதயினம்
தாயிடம்கூட.....

அட!
எங்கே போனார்
இந்த யோகி?

சரி!
இனிமேலாவது
பதிபக்தி,
ஆணாதிக்கம்,
வறுமை,
சம்பிரதாயங்கள்,
குருட்டுப்பாசம்
இவற்றை விட்டுவிட்டு
தாய்ப்பாசத்தின் பெருமையைப்
பெண்கள் காக்கட்டும்!

இல்லையேல்.....
தமிழ்த் தாய்ப்பாசம்
எகிப்திய மம்மியாய்ப் போகலாம்!!!

-ஞானசேகர் (போகி)

(யோகிகள் இருக்கும்வரை போகிகள் சாவதில்லை)

Tuesday, February 07, 2006

பொய்க்கா(த)ல்கள்

சமர்ப்பணம் : (ரா.பார்த்திபன் சொன்னதுபோல்) வெளிவந்த பாதை போலவே வேறொன்றில் உட்புகத் துடிக்கும் செயலுக்குக் காதல் என்று பெயரிட்டவர்களுக்காக....



தியானத்தில் இருந்தான்
யோகி
வேட்டி இல்லாமல்
அருகில் அமர்ந்தான்
போகி

யோகியே ஆரம்பித்தான்.
ஏன் இந்த
அரைநிர்வாணப் பக்கிரி வேடம்?

போகி பகர்ந்தான்.
வழியில் கிடந்த
அனாதைக் கிழவனின்
முழு நிர்வாணம் மறைக்க
என்
அரை நிர்வாணத்தை அடகு வைத்தேன்

சற்றே தள்ளி அமர்ந்தான் யோகி.

போகி கேட்டான்.
உலகில் மாறாதது எது?

யோகி சொன்னான்.
ஐன்ஸ்டீன் பிறப்பால்
ஒளி மறைந்தது
காதல் மட்டும் மிச்சம்

போகியின் கேள்வி.
காதல் என்பதென்ன?

யோகியின் பதில்.
வரலாற்றைக் கேட்டென்
காதலைத் தெரியுமாவென்று
அது சொன்னது
காதல்
ஆப்பிளில் பிறந்தது
ஏதேனில் வளர்ந்தது
ஊனம் உடைத்தது
சாதியைச் சவுக்கால் அடித்தது
மதம் மறந்தது
எல்லை தாண்டியது
கருவிகள் செய்தது
பதவி துறந்தது
உயிர்விட்டது

காதல் கற்கவில்லை
காதல் கற்பிக்கப்படவுமில்லை
காதல் மணக்கவில்லை
காதலால் பலர் மணந்துகொண்டனர்

போகி இடைமறித்தான்.
அதே வரலாறுதான் சொன்னது
காதல்
சுவரேறிக் குதித்தது
பெற்றோரைவிட்டு ஓடிப்போனது
தற்கொலை செய்தது
சந்தேகப்பட்டது
காட்டிக்கொடுத்தது
வயது மறந்தது
குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டது

பலர் காதலால்
இயற்கை எய்தினர்
காதல்
இயற்கையில் எஞ்சியது

யோகி கேட்டான்.
ஏன் கனியிருப்பக்
காய் கவர்கிறாய்?
நிலவை ரசி
களங்கத்தைப் பார்க்காதே

போகி சொன்னான்.
நிலவின் மறுபக்கத்தைப்
பார்த்தவன் நான்
எனக்குத் தெரியும்
சூரியன் உதிப்பதில்லை

போகி இன்னும் சொன்னான்.
உங்கள் காதல்
அசிங்கங்களை
அம்பலப்படுத்துகிறேன் கேளுங்கள்

முன்னால்போய்
செலவுகள் செய்வீர்கள்
தெரிவதில்லை
அது பைனான்ஸில் போடும் பணம்....

முத்தங்கள்
நீங்கள் ஏமாறுவீர்கள் என்பதற்கான
ISI முத்திரைகள்....

தன் இதயம்
உன்னிடம் இருப்பதாகச் சொல்லி
உன் தாயின் இதயம் கேட்பாள்
தனக்குப் பொருத்த....

காதலா? கல்யாணமா?
என்ற பட்டிமன்றத்தில்
காதலர்கள் இருப்பர்
எதிரெதிர் அணியில்....

கல்யாண check post பார்த்தாலே
காதல் கள்ளச் சரக்கைப் போட்டுவிட்டு
காதலர்கள் ஓடுவர்
திசைக்கு ஒன்றாக....

வெள்ளாடு நீங்கள்
அலங்கரிக்கப் படுகிறீர்கள்
தழுவல்களால்....

அடுத்த வருடம்
ரக்க்ஷா பந்தன் கட்ட
ஒத்திகை பார்ப்பாள்
மாரியம்மன் கோயில் தாயத்தில்....

காதல்வலி வந்ததால்
தாயின் பிரசவவலி
மறந்து போவீர்கள்....

அந்தப் புற்றின்
எட்டாவது துளையில்
பாம்பைப் பார்த்ததாக
யாராவது சொன்னாலே
பால்வைக்க வரமாட்டான்
அப்பாவி காதலன்....

யோகி இடைமறித்தான்.
கடவுள்
காதல்
இவை இரண்டும்
புரியாதவர்களுக்குப்
புரிந்தவர்களைப் பற்றி
புரியாது....

போகி சொன்னான்.
கடவுளைப் புரிந்துகொண்டதாக
சொன்னார் ஒரு சாமியார்
இப்போது
அவரைப் புரிந்துகொள்ள யாருமில்லை
இருக்கிறார்
தனிமைச் சிறையில்....

நான் ஒருநாள்
காதலின் அந்தப்புரத்தை
ஒளிந்திருந்து பார்த்துவிட்டேன்
இருட்டுக்குள் தெரிந்தது உண்மை....

கடவுளின் இலக்கு அன்பு
காதலின் இலக்கு காமம்

காதல்
காமத்தின் மரூஉ
காதல் நதி
காமம் கடல்
காதல் மணியோசை
காமம் யானை
காதல் கருப்பை உயிர்
காமம் மண்
காதல் சூரியகாந்தி
காமம் சூரியன்

காமம் இலக்கில்லை என்றால்
எவனும் பயணிக்க மாட்டான்
காதல் பாதையில்....

ஆயுதம் இருப்பதாகக்கூறி
எண்ணெய் தேடுவது போல
காதல் இருப்பதாகச் சொல்லி
காமம் தேடுகிறீர்கள்....

பகலில் current கொடுப்பதாகச் சொல்லி
இரவில் fuss எடுத்துக் கொள்கிறீர்கள்....

போகி இன்னும் சொன்னான்.
காதலில்
pass ஆனவர்களைவிட
காதலால் +2ல்
fail ஆனவர்கள் அதிகம்....

ஒரே வருடத்தில்
நான்கு பேரைக் காதலிக்கிறீர்கள்
அல்லது
நான்கு வருடமாய்
ஒருத்தியைக் காதலிக்கிறீர்கள்....

மீனுக்கு மூன்று நாள்
காதலுக்கு அறுபதுநாள்....

"போரில் ஜெயிக்க வேண்டும்
காதலில் தோற்க வேண்டும்"
-காதலர்களின் தாரகமந்திரம்....

காதலிக்கும் ஆணும்
காது குத்திக் கொள்ளும் ஆணும்
ஒரேபோல்
தெரிந்தே தோற்கின்றனர்....

இப்படி....
சதி
நம்பிக்கையின்மை
நம்பிக்கைத்துரோகம்
தற்கொலை
கோழைத்தனம்
சுயநலம்
ஊதாரித்தனம்
போன்ற பாடங்களைப் போதிக்கும்
காதலைப்....

அட
எங்கே போனார்
இந்த யோகி?

சரி....
இனிமேலாவது
சந்ததிகள் பெருக்க
இயற்கை கற்றுத் தந்த வித்தையைக்
காதல் என்ற பெயரில்
கொச்சைப்படுத்தாமல் இருப்போம்....

-ஞானசேகர் (போகி)

(யோகிகள் இருக்கும்வரை போகிகள் சாவதில்லை)