Sunday, February 12, 2006

தழும்பில் + ஆதவன் = தழும்பில்லாதவன்

சமர்ப்பணம் : பாவங்களைப் பணத்தால் சமப்படுத்துபவர்களுக்காக



குதிகாலில்
அரை அங்குலம் வெட்டி
கொட்டும் குருதி துடைத்து
உப்பைத் தூவி
நெருப்பில் காயம் காட்டிக்கொண்டிருந்தான்
போகி.

தியானம் முடித்து
காயகல்பம் உபதேசம் செய்ய
கானகம்விட்டு ஊர்வந்தபோது
போகியின் காயம் பார்த்து
கடவுளாய் நின்றான்.
சரி.....சரி......
கல்லாய் நின்றான்
யோகி.

யோகியே கேட்டான்
ஏன்
காயம் செய்கிறாய்?

போகி சொன்னான்.
இல்லை
சிகிச்சை செய்கிறேன்.
ஒரே தவறை
மீண்டும் மீண்டும் செய்யும்
இந்தக் கால்களுக்கு
இதுவரை தவறியதற்கு
இரத்தமும்,
இனிமேல்
தவறாமல்
தவறாமலிருக்க
வலியும்
நான் தரும் சிகிச்சைகள்.
இரத்தம்
எனக்கு முதலுதவி.
வலி
எனக்கு தடுப்பு மருந்து.

யோகி கேட்டான்.
முதலுதவி என்ற பெயரில்
ஊனம் செய்கிறாயே?

போகி சொன்னான்.
சர்க்கரை வியாதி வந்தால்
உங்கள் காலை
நீங்களே வெட்டி
ஊனம் செய்வதில்லையா?

குட்டிப் பையனையும்,
குண்டு மனிதனையும்
சோதனை செய்ய
நா(கசா)சி சிறுத்தவர்களை
நீங்கள் குள்ளமாக்கிப் போனது
நினைவில்லையா?

'உழவனின் நண்பன் போ(பா)ல்,'
எனச் சொல்லிக்கொண்டு
அனைவரையும் நீங்கள்
குருடாக்கிப் போனதை
மறந்துபோனீரா?

ஆயுதம் இருப்பதாகச் சொல்லி
எண்ணெய் தோண்டப்போய்
'குறி'வைத்து
ஊனமாக்கியதை நீங்கள்
குறித்துக் கொள்ளவில்லையா?

நீங்கள் பலசாலிகளாக
நாட்டையும்,
சில கோயில்களையும்,
தாய்மொழியையும்
உடைத்துப் போட்டதில்லையா?

இவ்வளவு நல்லவன்
இவ்வுலகுக்கு வேண்டாம் என்று
இவ்வளவு காலமாய்
எவ்வளவு பேர் உயிரை
உரித்திருப்பீர்கள்?

இப்படி
நீங்கள் செய்யும் ஊனங்கள்
மற்றவர் உடம்பில்
என்று ஆகும்போது,
என் குற்றம் மறக்க
என் கால் காயத்தில்
நான் எடுக்கும் ரத்தம்
எப்படி என்னை ஊனம் செய்யும்?

யோகி சொன்னான்.
காயமும் செய்வாயாம்.
தடுப்பும் செய்வாயாம்.
உன் தடுப்பு மருந்தே
தடுக்கப்பட வேண்டுமே.
உன் தடுப்பு மருந்து
வலியின்
காயத்தின்
ஊக்கமருந்து.


போகி சொன்னான்.
அம்மைக்காயம் பார்க்கும்போது
இனி
அம்மா விளையாடாது என
நீங்கள் சந்தோஷப்படுவதில்லையா?

யாரோ ஒருவரின்
ஐந்து காயங்கள்
உங்கள் பாவம் போக்கிவிட்டதாக
உண்டியல் காசு போடுவதில்லையா?

சீல் வடியும்
புண்ணாய் இருந்தாலும்
உங்கள் பசி போக்க
நீங்கள் தாய் மார்பு
கடிப்பதில்லையா?

பூமியைக் காயம் செய்து
பயிரும், பொன்னும், கரியும்
நீங்கள் எடுப்பதில்லையா?

நீங்கள் சொர்க்கம் போக
காதைக் காயமாக்கிக்
கொள்வதில்லையா?

தளர்ந்த நரம்புகள்
உயிர்த்தெழும்போது
விரல்கள் முன்னிரவில் செய்த
தேகப் பயிற்சிகளை
உங்கள் அந்தரங்கக் காயங்கள்
வெட்கப்படுத்திப் போவதில்லையா?

தொப்புள்கொடி காயம் செய்து
நீங்கள் சுதந்திரமாவதில்லையா?

இப்படி
நீங்கள் செய்யும் காயங்களெல்லாம்
உங்கள் அற்ப ஆறுதல்களை
ஞாபகப்படுத்தும்
அடையாளங்களாகப் போனபோது
என் வக்கிரங்களையும்
மனித சமுதாயத்தில் தண்டனைகளற்ற
நான் செய்த சில குற்றங்களையும்
ஞாபகப்படுத்தி,
'மனிதன் வக்கிரமானவன்' என
அடையாளம் காட்டும்
என் காயங்களில் ஏது தவறு?

யோகி கேட்டான்.
தண்டனைகளற்ற
தவறுகளுக்கெல்லாம்
காயம்தான் சுயதண்டனை என்றால்
தழும்புகளால் எலும்பு
போர்த்தப்படாதா?

போகி சொன்னான்.
அரபு நாடுகளில் கற்பழிப்பும்,
சிங்கப்பூரில் சுத்தமின்மையும்
அபூர்வம் தெரியுமா?

அதனால்தான் சொல்கிறேன்.
உங்கள் தண்டனைகள்
உங்கள் தவறுகளைப் போல்
கொடுமையாக இருந்தால்
ஒவ்வொரு உறுப்பும்
அதிகபட்சம்
ஒரு தழும்பே பெற்றிருக்கும்.

யோகி கேட்டான்.
தழும்புகள் செய்வது
வக்கிரமில்லையா?

போகி சொன்னான்.
குற்றங்கள்
தண்டிக்கப்படாத போதுதான்
நீங்கள் வக்கிரமானவர்கள்.

இதற்கொரு உதாரணம் சொல்வேன்.

சுனாமி நிவாரணத்தில்
பிணங்களைக் காயப்படுத்தியதை
வக்கிரம் என்று சொன்ன
உங்களில் சிலர்தான்
அதே நிவாரணத்தில்
பொதுப்பணி என்ற பெயரில்........

அட!
எங்கே போனார்
இந்த யோகி?

யானைத் தலையனின்
கழுத்துக் காயங்கள் தெரிந்திருந்தாலும்
அவன் வக்கிரங்கள்
நாம் மறந்தே போனோம்!

சூரியனைத் தினம் பார்த்தாலும்
ஆசை தழும்பி அவன்
ஆயிரம் தழும்புகளால்
பிளக்கப்பட்டதையும்
நாம் மறந்தே போனோம்!

அப்படி ஒருநாள்
நம் தவறுகள்
மறக்கப்படும் வரை
தவறாமல்
காயம் செய்வோம்!

-ஞானசேகர் (போகி)

1 comment:

J S Gnanasekar said...

போகி நினைத்தவை:

1) குட்டிப் பையன் - Little boy, ஹிரோஷிமா நகரம் மீது போடப்பட்ட அணுகுண்டு,
2) குண்டு மனிதன் - Fat man, நாகசாகி நகரம் மீது போடப்பட்ட அணுகுண்டு
3) யாரோ ஒருவரின் ஐந்து காயங்கள் - இயேசு கிறிஸ்து
4) யானைத் தலையன் - பிள்ளையார்

மற்றபடி, யோகி - போகி பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது, இந்தப் பதிவுதான். சில நேரங்களில் தற்கொலையையும் ஆதரிப்பதே இப்பதிவின் உச்சக்கட்டம். ஏனெனில், தற்கொலை செய்யாத புழு, வண்ணத்துப் பூச்சியாய்ப் பறப்பதில்லை.

-ஞானசேகர் (போகி)